குலசை தசரா திருவிழா வரும் செப்டம்பர் 21-ம் தேதி தொடங்குகிறது!

Adminseptember 07, 2018Freebie, Template Comments

பிரசித்தி பெற்ற குலசை முத்தாரம்மன் கோயில் தசரா 10 நாள் திருவிழா வரும் செப்டம்பர் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது.

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக, தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசை என்றழைக்கப்படும் குலசேகரன்பட்டினத்தில்தான் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி விழா, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்றாலே தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு குலசை தசராதான் நினைவுக்கு வரும். குலசை, அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசாரா 10 நாள் திருவிழா, வரும் 21-ம் தேதி யானைமீது கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கடற்கரையில் அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி 30-ம் தேதி இரவு நடக்கிறது.கொடியேறிய அன்று பக்தர்கள் மாலை அணிந்து 10 நாள்கள் விரதமிருந்து காளி, அம்மன், பரமசிவன், பார்வதி, விநாயகர், முருகன், முனிவர், பிரம்மா, லெட்சுமி, சரஸ்வதி, அனுமன், சுடலை மாடன், கருப்பசாமி ஆகிய தெய்வங்களின் வேடமணிந்தும் பிச்சைக்காரன், போலீஸ், வக்கீல், டாக்டர், நர்ஸ், பெண், இளவரசி, குறவன், குறத்தி, முயல், கரடி என பல வகை வேடம் அணிந்தும் ஊர் முழுவதும் காணிக்கை தர்மம் எடுத்து கோயிலில் அக்காணிக்கையை செலுத்தி தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். இப்படி வேடம் அணிவதால் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த 10 நாள்கள் திருவிழாவில் தினமும் மாலையில் முத்தாரம்மன் ரிஷபம், மயில், சிம்மம், காமதேனு என ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு அம்சத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் என சுமார் 30 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்யும் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Comments

Leave your comment
Follow Us

Twitter